தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பா.ஜ.க., காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளின் தேசியத் தலைவர்கள் வரும் நாட்களில் தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால் தமிழகத் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
அதேபோல், தேர்தலைச் சிறப்பான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. அந்த வகையில், அங்கீகரிக்கப்படாதக் கட்சிகளுக்கு தனிச்சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சியின் வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டமன்றத் தேர்தலில், எஸ்.டி.பி.ஐ. கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியுடன் இணைந்து, ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை (மத்திய தொகுதி), திருச்சி (மேற்கு) ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் அ.ம.மு.க. கூட்டணியில் இணைந்து நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், காரைக்கால் (வடக்கு), மாஹே ஆகிய 4 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடுகிறது. இந்த 10 தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் தேர்தல் கமிஷனால் ஏற்கப்பட்டு, இன்று (22/03/2021) அவர்களுக்கு 'குக்கர் சின்னம்' ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.