சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அமமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அதேபோல், குடியாத்தம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அமமுகவின் நிர்வாகியுமான ஜெயந்தி பத்மநாபன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவில் வளாகத்தில் மதுரை மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஜெ.பேரவைச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருமங்கலம் எம்.எல்.ஏவுமான ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய அவர், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகள் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே அதிமுக வெற்றியை நழுவவிட்டது. தி.நகர், தென்காசி, காட்பாடி உள்ளிட்ட தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுக வெற்றியை நழுவவிட்டது.
நாற்பத்து மூன்று தொகுதிகளையும் சேர்த்து ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று திமுகவினர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். கட்சியினர் சோர்வடையாமல் உழைத்து ஒரு லட்சத்து 98 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தால் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பார்.
அமமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், திமுகவில் இணைந்துள்ளார். அமமுக கூடாரமே காலியாகிவிட்டது. பழனியப்பன் அதிமுகவில்தான் சேர்ந்திருக்க வேண்டும். எதற்காக திமுகவில் சேர்ந்தார் என்பது தெரியவில்லை. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்வதற்காக வருவோருக்கு சிவப்பு கம்பளம் விரித்து அதிமுக தொண்டர்கள் வரவேற்பு கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.