பாட்டாளி மக்கள் கட்சியின் 32ஆவது ஆண்டு விழாவையொட்டி கட்சியினருக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மடல் எழுதியிருக்கிறார்.
அதில், என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே...! சென்னை மெரினா கடற்கரையின் சீரணி அரங்கத்தில் மக்கள் கடலின் நடுவே 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட சமூக ஜனநாயக இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி, வரும் 16-ஆம் தேதி 31 ஆண்டுகளை நிறைவு செய்து 32-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியை விடவும் துடிப்பான, பொறுப்பான அரசியல் கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்தப் பெருமைக்குக் காரணம், சந்தேகமே இல்லாமல் நீங்கள் தான். பாட்டாளி மக்கள் கட்சியின் இதயமும் நீங்கள் தான்... அதில் ஏற்படும் உயிர்த்துடிப்பும் நீங்கள் தான். இதயம் இல்லாமல் உடலின் இயக்கம் இருக்க முடியாது என்பதைப் போலவே, நீங்கள் இல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை. உங்களால் தான் பாட்டாளி மக்கள் கட்சி துடிப்பாக இயங்குகிறது.
ஓர் அமைப்பு தொடங்கப்பட்டால், அது இயங்குகிறதோ.... இல்லையோ, ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டு விழா வந்தே தீரும். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழாக்கள் எனப்படுபவை அப்படிப்பட்டவை அல்ல. ஒவ்வொரு ஆண்டு விழாவுமே பாட்டாளி மக்கள் கட்சியின் கடந்த ஓராண்டு கால செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து, தணிக்கை செய்யும் நிகழ்வாகவே அமைகின்றன. அவ்வாறு தணிக்கை செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலையில் சூட்டப்படும் மக்கள் பணி என்ற கிரீடத்தில், புதிய சாதனைகள் எனப்படும் வைரக்கற்கள் பதிக்கப்படுவது என்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. அது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர்ச்சியான வளர்ச்சியாகும்.
கடந்த ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் 31-ஆவது ஆண்டு விழாவை, மக்களவைத் தேர்தலில் பொய்களால் விளைந்த தோல்வியின் பின்னணியில் கொண்டாடினோம். தோல்விகளைக் கண்டு துவளாமல் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று உறுதியேற்றுக் கொண்டோம். அதன்படியே, காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது, கடலூர், நாகை மாவட்டங்களில் அமைக்கப்படவிருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத் திட்டத்தைக் கைவிடச் செய்தது, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசின் முடிவைக் கைவிடச் செய்தது, தேசிய அளவிலான ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் என மத்திய அரசை அறிவிக்க வைத்தது, பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுத் தந்தது, தமிழகத்தில் 4 மாவட்டங்களைப் பிரிக்க வைத்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 5 புதிய மாவட்டங்கள் அமைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது, பஞ்சமி நில நாடகங்களை அம்பலப்படுத்தியது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகளில் வெற்றி பெற காரணமாக இருந்தது, கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை இடங்களில் அ.தி.மு.க. - பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற உதவியது எனக் கடந்த ஓராண்டில் நாம் படைத்த சாதனைகள் பட்டியலிட முடியாதவை.
ஓர் அரசியல் கட்சியின் நோக்கம் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுவதும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதும் தான். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து மிகச்சிறந்த அரசியல் கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. அந்த அளவில் நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால், அதுமட்டுமே ஓர் அரசியல் கட்சிக்கு போதுமா? என்றால், நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும். அரசியல் கட்சியின் நோக்கம் மக்களுக்கு நன்மை செய்வதாக இருந்தாலும், அதன் இலக்கு என்பது ஆட்சியைப் பிடிப்பதாகத் தான் இருக்கும். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் நினைப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்; அவற்றின் உச்சம் பதவி சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதாகவும் இருக்கலாம். எனினும் பா.ம.க.வின் ஆசை அதுவல்ல.
உழவர்கள் முதல் மாணவர்கள் வரை, மகளிர் முதல் மருத்துவர்கள் வரை அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளையும் நாம் நிறைவேற்றி வைத்திருந்தாலும் கூட, அதற்காக நாம் நடத்திய போராட்டங்கள் மிகவும் அதிகம். ஏராளமான போராட்டங்களை நடத்தியும் கூட முழுமையான மதுவிலக்கு, அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி, உழவர்களுக்கு அனைத்து இடு பொருட்களையும் இலவசமாக வழங்குவதுடன், அவர்களின் விளைபொருட்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலைகளை நிர்ணயிப்பது, தமிழ்நாட்டை, மற்ற மாநிலங்களின் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்காத அளவுக்கு பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தி, தண்ணீரில் தன்னிறைவு பெற்ற பூமியாக மாற்றுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. இத்தகைய மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால், ஆட்சி என்ற அதிசய திறவுகோல் நமக்குத் தேவை. அதற்காக மட்டும் தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நினைக்கிறது.
ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் நாம் தோல்விகளைத் தான் சந்தித்து வருகிறோம். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்; நமது தவறுகளும் கூட அப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருக்கலாம். அவற்றிலிருந்து கற்ற அனுபவங்களில் இருந்து தான் புதிய திட்டங்களை வகுத்து நாம் செயல்படத் தொடங்கினோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை ஆகியவற்றை அமைத்து, அவற்றை அன்புமணி மக்கள்படையாக மாற்றுவதற்கான நமது பயணம் வேகமடைந்த நேரத்தில் தான் கொடிய கரோனா வைரஸ் பரவல் அனைத்துக்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டது. எனக்கு இன்னும் சில நாட்களில் 81 வயது நிறைவடையப் போகிறது. ஆனாலும், எனது எண்ணங்கள் அனைத்தும் எப்போது பாட்டாளி சொந்தங்களைச் சந்திப்போம்; இயக்கப்பணிகளை எப்போது முழுவீச்சில் தொடங்கி இலக்கை அடைவோம் என்பதாகவே உள்ளன. எனக்கே அவ்வளவு துடிப்பு இருந்தால், இளைஞர் கூட்டம் நிறைந்த பாட்டாளி சொந்தங்கள் எவ்வளவு துடிப்பாக இருப்பீர்கள்? என்பதை எனது மனத்திரையில் காட்சிகளாக்கி உணர்ந்து கொள்ள முடிகிறது.
இந்தியாவில் சமூகநீதிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் சமூகநீதிக்கு எதிரான பிரச்சாரம் நச்சு சக்திகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அச்சுறுத்தலை முறியடித்துச் சமூகநீதியைக் காக்க வேண்டும் என்ற பெரும் கடமையும் நமக்கு உள்ளது. அதை உணர்த்துவதற்காகத் தான் ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ என்ற தலைப்பில் நீண்ட தொடரை எனது முகநூல் பக்கத்தில் எழுதி வருகிறேன். இன்றுடன் 36 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. இட ஒதுக்கீடு என்ற உரிமையைப் பெறுவதற்காக நமது முன்னோர்கள் தொடங்கி நாம் வரை பல தலைமுறைகளாக நடத்தப்பட்ட போராட்டங்களை அந்தத் தொடரில் விரிவாக விளக்கி வருகிறேன். பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அத்தொடரைப் படிக்க வேண்டும்; அவ்வாறு படித்த ஒவ்வொருவரும் நண்பர்கள், பிற கட்சியினர் எனக் குறைந்தது 10 பேரிடம் அது குறித்து விளக்கி, புரிய வைத்து, சமூகநீதி உணர்வை ஏற்படுத்த வேண்டும். தொடரைப் படித்த நண்பர்களுடன் தொலைபேசியில் விவாதிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டும்தான் உள்ளன. ஆனால், நாம் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகளோ ஏராளமாக உள்ளன. அனைத்துக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது கரோனா வைரஸ் பரவல் அச்சம் தான். அந்த அச்சம் தணிந்தவுடன், ஓட்டப்பந்தயத்தில் ஓடி முதலிடம் பிடிப்பதற்காக, போட்டி தொடங்குவதை அறிவிக்கும் துப்பாக்கிச் சுடும் ஓசை எப்போது கேட்கும் என்று காத்திருக்கும் தடகள வீரர்களைப் போல, நமது செயல்வீரர்களாகிய பாட்டாளி சிங்கங்கள் களப்பணியாற்றுவதற்காக காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வழக்கமாக பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழா நாளில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் அதிக அளவில் நடைபெறும். ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், வாய்ப்புள்ள பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் கொடியேற்றி 32-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறேன். பாட்டாளிகளாகிய உங்களையெல்லாம் சந்தித்து இன்றுடன் 123 நாட்களாகிவிட்டன. உங்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு நாட்களாகக் காத்திருக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம்; அதற்கு முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் 32-ஆவது ஆண்டு விழாவையொட்டி வரும் 16-ஆம் தேதி இணைய வழியாக நடைபெறும் ஆண்டு விழா சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் உங்களையெல்லாம் சந்திக்கவும், எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாடவும் காத்திருக்கிறேன். இணையத்தில் சந்திப்போம். இவ்வாறு கூறியுள்ளார்.