சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என ஒ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து இன்று காலை 9 மணிக்கு நீதிமன்றம் பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.