Skip to main content

“ஒளிரும் இந்தியா எனக் கூறி நாங்கள் தோற்றோம்..” - அமைச்சர் ராஜ்நாத் சிங்

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

"We lost by claiming to be Shining India." - Minister Rajnath Singh

 

சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என உதயநிதி கூறிய கருத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது தான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். சினிமாவில் சமஸ்கிருதம் கலந்த தமிழ் வசனங்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்த பொழுது கலைஞர் தான் 'எந்த காலத்திலடா பேசினால் பராசக்தி' என வசனம் வைத்தார். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

 

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும்; அடைவார்'' என்றார்.

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க.வினர், இந்து அமைப்பினர் மற்றும் வலதுசாரிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 

அதேபோல், இது குறித்து ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் நடந்த பாஜகவின் யாத்திரை நிகழ்ச்சியை துவக்கி வைத்த ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான திமுக சனாதன தர்மத்தை அவமதிக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இது குறித்து மவுனம் காத்து வருகின்றன. கெலாட், சோனியா ஆகியோர் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? காங்கிரஸும் இந்தியாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 

இந்த கருத்துக்கு காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சியான திமுகவுடன் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் அல்லது தனது கருத்துக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது, அழிக்கப்பட வேண்டும், முடிவுக்கு வர வேண்டும் என்று சொல்லும் ஒரு தலைவர் அவர்களின் சொந்த கூட்டணியில் இருக்கிறார். நீங்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேசம் உங்களை எளிதில் மன்னிக்காது. சனாதன தர்மம் சாதி, மதம் மற்றும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டாது. சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்.

 

என்ன நடந்தாலும் மோடி பிரதமர் ஆகக் கூடாது என 28 எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும், இந்த நாட்டின் மரியாதை மற்றும் அதனை அதிகரிக்கவுமே ஒரு கூட்டணி இருக்க வேண்டும். ஆனால் எந்த நிபந்தனையிலும் மோடி ஆட்சிக்கு வராமல் தடுக்கவே இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியா என்ற பெயரை வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன், இந்த பெயர் மிகவும் ஆபத்தானது. 2004ல் ‘ஒளிரும் இந்தியா’ எனும் கோஷத்தை எழுப்பி நாங்கள் தோற்றோம். இப்போது நீங்கள் இந்தியாவை உங்கள் பெயராக மாற்றிவிட்டீர்கள். உங்களது தோல்வி நிச்சயம்” எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்