Skip to main content

“அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் ஆட்சி இருந்தது” - ஓ.பி.எஸ் பேட்டி!

Published on 28/07/2021 | Edited on 28/07/2021

 

"That was the extent of Jayalalithaa's rule" - OPS interview

 

திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி அதிமுக உரிமைக்குரல் போராட்டத்தை அறிவித்தது. அதனடிப்படையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான  ஓ.பி.எஸ்., போடியில் உள்ள தனது வீட்டின் முன் உரிமைக்குரல் போராட்டத்துக்கு குரல் கொடுத்தார். அதன்பின் பத்திரிகையாளரிடம் பேசிய ஓ.பி.எஸ்., “கடந்த 2001 முதல் 2006 வரை இருந்த ஜெயலலிதா ஆட்சியின்போது மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த உடனே மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது .

 

அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சியாக இருந்த ஜெயலலிதா, மின்சாரத் தட்டுப்பாடு பற்றி பேசும்போது, இன்னும் மூன்று மாதத்தில் மின்சாரத் தட்டுப்பாடு நீங்கும் என்று அப்போதிருந்த மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். ஆனால் தொடர்ந்து மின்சாரத் தட்டுப்பாடாகத்தான் திமுக ஆட்சியில் இருந்துவந்தது. அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்சாரத் தட்டுபாடு நீக்கப்பட்டு, உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு கொடுக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டது. அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் ஆட்சி இருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், ‘கடந்த 10 ஆண்டுகளாக அம்மா ஆட்சியில் விலைவாசி உயர்வு ஏற்படவில்லை. அதுபோல் மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கும், தொழிற்சாலைக்கும் போதுமான மின்சாரத்தைக் கொடுத்துவந்தோம்.

 

அதுபோல் கல்வி, தொழில் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றோம். அதேபோல் நெல் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறோம். அதுபோல் சட்ட ஒழுங்கு ஏற்படாமல் அமைதிப் பூங்காவாக தமிழகத்தைக் கொண்டுவந்தோம். இப்படி கடந்த பத்தாண்டுகளாக சிறப்பான ஆட்சியை செய்தோம்’ என்று நாங்களும் தேர்தல் பிரச்சாரம் மூலம் தெரியப்படுத்தினோம். ஆனால் திமுகவும் அதன் தலைவர் ஸ்டாலின் மற்றும் முன்னணி தலைவர்கள் எல்லாம்  மக்களிடம் பொய்யான 505 வாக்குறுதிகளைச் சொல்லி மக்களை நம்ப வைத்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் இந்த மூன்று மாதத்தில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படாத ஆட்சியாகத்தான் இந்த திமுக ஆட்சி  இருந்துவருகிறது. அதற்கு அச்சாரமாகத்தான் தற்போது உரிமைக்குரல் முழக்கப் போராட்டத்தை கிளைக் கழகம் முதல் தொடங்கியிருக்கிறோம். அதைப் போகப் போக மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்