கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக, 3,16,329 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. விருதுநகர் மாவட்டமானது தேமுதிகவின் மறைந்த தலைவர் விஜயகாந்த்தின் சொந்த மாவட்டம் என்பதால், விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியை மீண்டும் கேட்டுப் பெற்றதில் ஒரு சென்டிமென்ட் இருக்கிறது.
இங்கு விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். மகன் விஜய பிரபாகரனுடன் விருதுநகர் வந்த அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா, தேர்தலில் மகன் வெற்றிபெற வேண்டி விருதுநகர் மாரியம்மன் கோவிலில் வழிபட்டார். விருதுநகர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், விருதுநகர் மாவட்ட ஆட்சியருமான ஜெயசீலனிடம் இன்று (25ஆம் தேதி) தனது வேட்புமனுவை விஜய பிரபாகரன் தாக்கல் செய்துள்ளார். அப்போது விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜியும், விருதுநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் காஜா ஷெரீப்பும் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து வெளியே வந்த விஜய பிரபாகரன், அங்கு பெரும் திரளாகக் கூடியிருந்த கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.