அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முரண்பாடுகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது எடப்பாடி அணியை எனவும், ஓபிஎஸ் அணி எனவும் அதிமுக பிரிந்து கிடக்கிறது. இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணித்தனர். இதற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கியது ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், ''இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதிலும் நிச்சயமாக கலந்து கொள்வோம். ஜனநாயக கடமை ஆற்ற வராதவர்களை பற்றி நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம். எங்களுக்கு இருக்கும் 4 எம்எல்ஏக்கள் ஆதரவு நிச்சயம் மேலும் அதிகரிக்கும் பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார்.
அப்பொழுது 'பொன்விழா ஆண்டு அதிமுகவில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இப்படி இரு அணிகளாக பிரிந்து கிடப்பது அழகாக இருக்கிறதா?' என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வைத்திலிங்கம், ''அதை நீங்கள், மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். கட்சிக்கு அழகாக இருக்கிறதா என்பதை மக்கள் முடிவு பண்ணுவார்கள், தொண்டர்கள் முடிவு பண்ணுவார்கள்'' என்றார்.
'சரி சமாதானத்திற்கு என்னதான் வழி' என்ற கேள்விக்கு, ''எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி சிந்தித்தால் இந்த கட்சியில் சமாதானம் உண்டாகும். சுயநலத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் சமாதானத்திற்கு உட்பட மாட்டார்கள்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'அவர்களை சிந்திக்க விடாமல் செய்வது யார்? என கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த வைத்திலிங்கம், ' அந்த கேள்வியை அவர்களிடம் போய் கேளுங்கள்'' என்றார்.