Skip to main content

“வளர்மதி நவீன புரட்சித் தலைவி...” - இ.பி.எஸ் அணியின் மீது புகழேந்தி பாய்ச்சல்

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

pugazhenthi talk about admk and edappadi palanisamy

 

திருச்சியில் வருகின்ற 24-ஆம் தேதி எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் கட்சி 50 ஆண்டுகள் முடிந்து 51 வது ஆண்டின் துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற உள்ளது. அதற்கான முன்னுரையாக நேற்று திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓபிஎஸ் தலைமையிலான தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் மருது அழகுராஜ் பேசுகையில், “அநீதி எழும்போதெல்லாம் திரைப்படத்தில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ராஜ்கிரண் வருவது போல எடப்பாடியின் அரசியல் பித்தலாட்டத்தை கண்டு  எங்கள் அண்ணன் ஓபிஎஸ் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நிற்கிறார். இபிஎஸ் என்ற துரோகியை குறித்து சொல்ல இருவர் இருந்தால், ஓபிஎஸ் என்ற உத்தமரை சொல்ல 4பேர் இருப்பார்கள். எனவே இங்குள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய பங்கிற்கு அதிகமான சீர் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். சமீபத்தில் ஒருவர் சீர் கொண்டு சென்றார். எடப்பாடி வயதிற்கு வந்துவிட்டாரோ? அதுவும் புதுக்கோட்டையில் இருந்து சீர் கொண்டு செல்லப்பட்டது. அந்த சீரில் குட்கா கொண்டு சென்றுள்ளனர். ஓபிஎஸ் செய்த ஒரு தவறை இபிஎஸ்ஸை சொல்லச் சொல்லுங்கள். எடப்பாடி செய்த துரோகத்தை வெளிச்சம் போட்டு இந்த ஊருக்கு சொல்லும் நாள் ஏப்ரல் 24 தான், இலை கோட்டையின் பலத்தை இந்த மலைக்கோட்டையில் காட்ட வேண்டும். திருச்சியில்  கடல் இல்லை என்ற ஒரு குறையை ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டு வரவேண்டும். இதை பார்க்கும் இபிஎஸ்க்கு லூஸ்மோசன் போக வேண்டும்” என்றார்.

 

புகழேந்தி கூறுகையில், “பிரதமரை பார்க்க ஓபிஎஸ் வந்தபோது இபிஎஸ் ஓரமாக ஒதுங்கி நின்றார். ஆனால் பிரதமர் ஓபிஎஸ்ஸை சந்தித்தாரே அவருடைய காலில் வந்து விழச் சொல்லுங்கள். வழக்கு தோல்வி அடைந்து விட்டதாகப் பலர் என்னிடம் கேட்டார்கள். இது தர்ம யுத்தம் டெல்லி நீதிமன்றத்தில் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்துவோம் என்று கூறினேன். இபிஎஸ் மீது தேர்தல் ஆணையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் போட்டியிட வேண்டும் என இபிஎஸ் மனு அளித்தார். ஆனால் நீதிபதி தன்னால் விசாரிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். 1996ல் திருச்சியில் அன்று ஜெயலலிதா விடிய விடிய மாநாட்டை நடத்தினார்கள். நாம் நடத்தப்போகும் மாநாட்டில் நீங்கள் இராணுவ சிப்பாய்கள் போல இருந்து செயல்பட வேண்டும். எடப்பாடியை தகர்க்க எடப்பாடியில் இருந்து மிகப்பெரிய கூட்டம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்றைய காலகட்டத்தில்  நவீன பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் என்று பலர் அழைக்கப்படுகிறார்கள். அதில் பொன்னையன் தான் நவீன தந்தை பெரியார், அண்ணா யார் என்றால் கே.பி முனுசாமி, இன்னொருவர் தொப்பியும் கண்ணாடியும் போட்டுக் கொண்டு வலம் வந்தார்.  

 

வளர்மதி தான் நவீன புரட்சித் தலைவி, இது வெட்கக்கேடானது. அதேபோல் ஜெயகுமார் பேசுகிறார், "மாநாடு குறித்து பேசியவர் முதலில் தெருக்கூட்டம் என்றவர் கருப்புப் பணம் 200கோடியை வைத்து மாநாடு நடத்தப்படுகிறது" என்று கூறுகிறார். மாநாடு முடிந்த பிறகு மைதானத்தில் கிடக்கும் பிளாஸ்டிக் கேன்கள், பைகள் சேகரிக்கும் டெண்டரை ஜெயக்குமாருக்கு கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.  எடப்பாடி பல தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார். ஆனால் ஓபிஎஸ் ஒரு முறை கூட தோற்கவில்லை. பிரதமர் ஓபிஎஸ்ஸை சந்தித்த போது தோளில் தட்டிக் கொடுத்ததற்கு காரணம் மீண்டும் நீங்கள் முதலமைச்சர் ஆவீர்கள் என்பதற்காகவே. ஓபிஎஸ் தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்து நிறைய இழந்து விட்டார். ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும் ஓபிஎஸ்சை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  தற்போது இருக்கும் சபாநாயகர் புத்திசாலியானவர். இபிஎஸ்சின் திட்டம் என்ன என்று நன்றாகத் தெரியும். சட்டமன்றத்தில் மிகச் சிறப்பாக இபிஎஸ்ஸை கையாண்டு வருகிறார்.  ஏப்ரல் 24 இபிஎஸ்ஸின் அரசியலுக்கு சாவு மணி அடிக்கும் மகிழ்ச்சியான தருணமாக அமைய வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்