![mrk](http://image.nakkheeran.in/cdn/farfuture/mTN0XsCRLj4D_Pw0Y-VJFZO0FQTJwlZdWYknC6ziGPM/1598496107/sites/default/files/inline-images/mrk%20600.jpg)
கரோனோ நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை கடலூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
அதேசமயம் கடலூர் மாவட்டத்திலுள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"கடலூர் மாவட்டத்தில் கரோனா தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்தவிதமான தடுப்பு நடவடிக்கையும் முறையாக எடுக்கவில்லை. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் இன்று (27.08.2020) ஆய்வு செய்ய வருகிறார். ஆனால் சுகாதாரத்துறை நோய்த் தொற்றை தடுக்க எந்த பணிகளையும் செய்யாமல் உள்ளது.
கடலூர் மாவட்டம் ஒரு சிறிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 9000த்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கு தமிழக அரசும், சுகாதாரத்துறையின் அலட்சியமே காரணம்.
தற்போது இருக்கிற மாவட்ட ஆட்சித்தலைவர் இளைஞராக இருப்பதால் நன்றாக செயல்படுவார் என்று நினைத்தோம். ஆனால் தற்போது முற்றிலுமாக நம்பிக்கை இழந்து இருக்கிறோம். ஏனென்றால் தற்சமயம் அதிகளவில் தினந்தோறும் சுமார் 400 வரை கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்சமயம் தமிழகத்தில் கரோனா தொற்றில் இரண்டாவது மாவட்டமாக உள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியாக உள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெல்லிக்குப்பம் நகராட்சிகள் தற்போது கிளஸ்டர் ஏரியாக்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஈடாக காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதிகளிலும் தற்போது கரோனா தொற்று அதிகளவில் பரவி இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாகவே நல்வாழ்வுத்துறை அமைச்சர் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றும், முதலமைச்சர் சட்டசபையில் இன்னும் 10 நாட்களில் கரோனா தொற்று முற்றிலுமாக குறைந்து விடும் என்றார்கள்.
இதில் மக்களின் பங்களிப்பும், அரசாங்கத்தின் பங்களிப்பும் இருந்தால் தான் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் சுகாதாரத்துறையில் பணிபுரியும் இயக்குநர், இணை இயக்குநர் யாராக இருந்தாலும் களப்பணியில் ஈடுபடாமல் புள்ளி விவரங்களை மட்டும் கொடுத்து விடுகிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக களப்பணியாளர்கள் உள்ள கட்டமைப்புடன் கூடிய சுகாதாரத்துறை இயங்கி வருகிறது. சரியான வழிகாட்டுதல்கள் இல்லாத காரணத்தால் நோயின் தாக்கம் அதிகரித்து, உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதற்கு சரியான விழிப்புணர்வும், திட்டமிடலும் இல்லாத காரணத்தினால் தொற்று பரவி வருகிறது.
மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம் என்று சொன்னார். அரசாங்கமும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த நோயை முற்றிலும் விரட்டி அடிக்கலாம். ஆனால் இந்த அரசாங்கமோ தான் தோன்றி தனமாக செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தல் வருவதால் முதலமைச்சர் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல் கூட்டங்களை நடத்தி வருகிறார். சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருக்கிறார்கள். கிராமப் பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி காய்ச்சல் உள்ளவர்களுக்கு வேண்டிய முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
கரோனா தொற்று அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் டெஸ்ட் கொடுத்தால் குறைந்த பட்சம் 5 நாட்கள் ஆகிறது ரிசல்ட் வருவதற்கு. அதற்குள் அவர்கள் வீட்டிற்கு சென்று பல நபர்களை சந்திக்கும்போது நூற்றுக்கணக்கான மக்களுக்கு இந்த நோய் பரவி வருவது ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்த டெஸ்ட் எடுத்த 24 மணி நேரத்தில் ரிசல்ட் வந்தால் கூட ஓரளவிற்கு நோயின் தன்மையை கட்டுப்படுத்தலாம்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் முதலமைச்சர் ஆய்வு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு அழைப்பு இல்லை. ஏனென்றால் தவறுகளை சுட்டிக்காட்டுவோம் என்பதால் எங்களுக்கு அனுமதி இல்லை. மக்கள் பிரதிநிகளோடு இணைந்தால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும். ஆகவே கிட்டத்தட்ட 5 மாதத்திற்கு மேல் மக்களை முடக்கி போட்டு, வாழ்க்கை முறையே மாறும் அளவிற்கு இந்த அரசு உருவாக்கியுள்ளது.
இந்த நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அதிமுக வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு அதிகாரிகள் யாரும் களப்பணியில் ஈடுபடவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான் எங்களால் முடிந்த அளவில் களப்பணியில் ஈடுபட்டு உதவிகளை செய்து வந்தோம். ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்தவர்கள் கூட எந்தவித களப்பணியிலும் ஈடுபடவில்லை. ஆளும் கட்சியில் உள்ளவர்கள் அரசு அதிகாரிகளை வைத்து சம்பாதிக்கும் நோக்கோடு மட்டுமே இருக்கின்றனர்.
இதே போல் சட்டமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், முதலமைச்சரும் கரோனா நோயை விரட்டி அடிப்போம் என்று சொன்னார்கள். சட்டமன்றத்தை மூட வேண்டும் என்று சொன்னதற்கு அதற்கு அவசியம் இல்லை என்று சொன்னவர்கள் தற்சமயம் சட்டமன்ற கூட்டத் தொடரை நடத்துவதற்கு வேறு இடம் பார்த்து வருகிறார்கள். இது இவர்களின் கையாலாவாத தனத்தை காட்டுகிறது. இதுவே கரோனா நோய்த் தடுப்பு தோல்விக்கு காரணம்.
நோயின் தன்மை தெரியாமலே சட்டமன்றத்தை காப்போம், மக்களை காப்போம் என்று வாய்ச்சவடால் அடித்தார்கள். ஆகவே உடனடியாக கரோனா நோயைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வு கூட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வேலையை கைவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களும் அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகியவை கடலூர் மாவட்டத்தில் வருவதால் அவரை அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் அழைக்காத பட்சத்தில் கருப்புக் கொடி காட்டப் போவதாகவும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.