சிதம்பரத்தில் அதிமுக கூட்டணி தலைமையிலான சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசுகையில் மதுரையிலிருந்து திருமாவளவனை அழைத்து வந்து அரசியல் அறிமுகம் செய்தது நான் தான். பின்னர் இருவரும் இணைந்து பல்வேறு இயக்கங்களை நடத்தினோம். அதனையொட்டி தமிழ் குடிதாங்கி என்ற பட்டமும், அம்பேத்கர் விருதும் வழங்கினார். பின்னர் நாளடைவில் அவரது பேச்சு, போக்கு, செயல் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் இருந்தது.
விடுதலை சிறுத்தைகள் ஒரு கட்சியே இல்லை ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த கட்சியை நடத்தி வருகிறார். என் தோட்டத்திற்கு வந்த அவரிடமும் தற்போது விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறாரே அவரிடம் இது போன்ற கட்சி வேண்டாம் என்று பலமுறை கூறியுள்ளேன் கேட்கவில்லை. அவரது கட்சியின் கொடியை மக்கள் பார்த்தாலே முகம் சுழிக்கிறார்கள். தமிழ் சமூக சீர்திருத்தத்திற்காக அரசியலில் அறிமுகம் செய்து வைத்தது எனது தவறு தான். அவரது கட்சி வன்முறை, கட்ட பஞ்சாயத்து கட்சியாக உள்ளது. என்னை கேட்டால் இப்படி ஒரு கட்சியே வேண்டாம் என்று கூறுவேன் என்றார். மேலும் பேசுகையில்
தமிழக முதல்வர், துணை முதல்வர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதின் மூலம் சிறப்பான ஆட்சிகளை செய்து வருகிறார்கள். ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு ஆகியவற்றை தடுக்கவே கூட்டணி அமைத்துள்ளோம். மீண்டும் மோடியே பிரதமராக வருவார். ஸ்டாலின் முதல்வராக வரமுடியாது. அவருக்கு கலைஞரிடம் நான் கூறிய பிறகு தான் துணை முதல்வர் பதவியே வழங்கப்பட்டது. அதிமுக, பாமக தேர்தல் அறிக்கை அற்புதமாக உள்ளது. திமுக தேர்தல் அறிக்கை இந்த இரு தேர்தல் அறிக்கையை முழுவதும் காப்பி அடித்துள்ளனர் அது உதவாத தேர்தல் அறிக்கை. சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பேசினார். கூட்டத்தில் அதிமுகவின் கடலூர் மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் பாண்டியன், காட்டுமன்னார்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் முருகுமாறன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.