அரசாங்க வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்தால் அரசு பொறுப்பாகாது என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 10-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். இதைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியதும், நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சரியாக 10.15 மணிக்கு 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ.11,600 கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் அரசு வேலைக்கு பணம் கொடுத்து பலரும் காத்துக்கொண்டு இருப்பதாகக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, “அரசு வேலைக்கு யார் பணம் கேட்டார்கள். பணம் கொடுத்து ஏன் ஏமாற்றம் அடைகிறீர்கள். முறையாகத் தேர்வுகள் நடத்தித்தான் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாந்தால் அரசு பொறுப்பாகாது” என்று கூறினார்.