ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு வருகிறோம். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் ஓடி ஒளிந்தது இல்லை என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “நாட்டு மக்கள் மாநிலங்களவையை உற்று நோக்கி வருகின்றனர். பல மூத்த உறுப்பினர்களால் நிறைந்தது மாநிலங்களவை. ஆனால் நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. நாட்டு மக்களின் பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கவலைப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் ஊழல்கள் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடியது.
மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய பொன்னான காலத்தை எதிர்க்கட்சிகள் வீணடித்தனர். இப்போது நாங்கள் மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தருகிறோம். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பிறகு 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 9 ஆண்டுகளில் 49 கோடி பேருக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கியுள்ளோம்.
பல்வேறு அரசு திட்டங்களின் பலன்கள் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்வதே உண்மையான மதச்சார்பின்மை ஆகும். மக்கள் நலன் தான் எங்களின் முன்னுரிமை. இதன் காரணமாகவே நாட்டில் உள்ள 25 கோடி குடும்பங்களுக்கு எல்பிஜி இணைப்புகள் கிடைக்கச் செய்துள்ளோம். பாஜக அரசு செயல்படக் கூடிய அரசு என மக்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு வருகிறோம். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் ஓடி ஒளிந்தது இல்லை. உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா 5ஆவது பெரிய நாடாக உள்ளது. மேலும், ஊடக வெளிச்சத்துக்காக சில தலைவர்கள் அவையில் இல்லாத விஷயங்களைப் பேசுகின்றனர். மேலும் சிலர், குடியரசுத் தலைவர் ஒரு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலே அவரை அவமரியாதை செய்கின்றனர்” என்றார்.