பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) பிற்பகல் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இதற்கிடையே, கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி இன்று (18-03-24) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக ஏற்கனவே, கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன் 4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று (18-03-24) தமிழகம் வந்துள்ளார். பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நடக்கும் சாய்பாபா காலனிக்கு சென்றார். அங்கிருந்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே, ரோடு ஷோவை பிரதமர் மோடி தொடங்கினார். திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டுள்ளார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்கிறார்.