நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அதே சமயம் இந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மேலும் பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அ.ம.மு.க. பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ம.க காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி நமோ செயலி (NAMO APP) மூலம் ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற தலைப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக பாஜகவின் அனைத்துத் தொண்டர்களும் மிக நீண்ட காலமாக நன்றாக தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். ‘எனது பூத், வலிமையன பூத்’ என்றால் எனது வாக்குச் சாவடி வலிமையானது என்று பொருள். இந்த திட்டம் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களையும் இணைப்பதுடன் ஒருவருக்கொருவரும் கற்றுக்கொள்ள உதவும்.
தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் வணக்கத்தோடு பேசத் தொடங்குகிறேன், ஆனால் இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு தொண்டர் மற்றொரு தொண்டரை வாழ்த்துகிறார். வணக்கம் என்றவுடன், தொண்டர்களுக்குள் ஒரு உணர்வு வரும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பள்ளி நண்பர்களை சந்திக்கும் போதெல்லாம், 25, 30 வருடங்கள் கடந்தாலும், சிறியவர், பெரியவர் என்று யாரும் பாராமல் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார்கள். அதேபோல், இது தேர்தல் பணி தொடர்பான ஒரு திட்டம் என்பதால் நானும் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறேன். உங்கள் எல்லோரையும் போல என் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொண்டனாகவே உழைத்திருக்கிறேன், அதனால்தான் இன்று நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருவதால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொது நிகழ்ச்சிகளுக்காக கடந்த முறை தமிழகம் வந்தபோது தமிழக மக்களின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொண்டர்களின் கடின உழைப்பைப் பார்க்க முடிந்தது, அப்படிப்பட்ட தொண்டர்களைப் பெற்றதை பெருமையாக உணர்ந்தேன். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை முன்மாதிரியாக கொண்டு பா.ஜ.க. செயல்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதும், அதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுவதும் எங்களது உறுதி. பா.ஜ.க.வின் பெண் தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
போதைப்பொருட்கள் நம் குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை அழிக்கும். கடந்த நாட்களில் கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள் பதுக்கல்களும், அதற்கு முக்கிய காரணமானவர்கள் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். இது மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே நீங்கள் அனைவரும் நம் குடும்பங்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பேசினார்.