சேலம் மாவட்டம் தே.மு.தி.க கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (27-10-23) கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “தமிழகத்தில், 6 மாதத்திற்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்திருக்கிறது. அங்கெல்லாம் பெட்ரோல் குண்டு வீசினது போக, இன்றைக்கு ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தால், தமிழகத்தில் எந்த அளவுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக காட்டுகிறது. ஏனென்றால், இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்னைக்கு வந்து ஆளுநர் மாளிகையில் தான் தங்கியிருக்கிறார். இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்றால் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஒரு தலைகுனிவு. ஒரு குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டுக்கு வந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசுகிறார்கள் என்றால் இது என்ன கலாச்சாரம்?.
எப்போதும், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்முறையை கையில் எடுப்பார்கள் என்பது வரலாறு. இதை ஏன் என்று கேட்டால், பா.ஜ.க கட்சியினர் தான் அவரை ஜாமீனில் எடுத்தார்கள் என்று சொல்கிறார்கள். அதே போல், மற்றொரு தரப்பில், தி.மு.க தான் ஜாமீனில் எடுத்தார்கள் என்று சொல்கிறார்கள். யார் ஜாமீனில் எடுத்தார்கள் என்பதை உளவுத்துறையும், என்.ஐ.ஏ.வும் கண்டுபிடித்து மக்களுக்கு தெளிவுபடுத்திச் சொல்ல வேண்டும்.
பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் இதுவே இறுதியாக இருக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் இதுமாதிரி ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது என்பதையும் தே.மு.தி.க சார்பில் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தை யார் நடத்தினார்கள் என்பதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மாறி மாறி குற்றம் சொல்லி கொண்டே தான் இருப்பார்கள். திமுக விற்கு ஏன் ஓட்டு போட்டோம் என்ற மனநிலையில் தான் அனைத்து மக்களும் இருக்கின்றனர். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இதற்கான விளைவு கண்டிப்பாக இருக்கும்” என்று கூறினார்.