திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் - டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பு, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்குவது, கேஸ் சிலிண்டருக்கான மானிய தொகை வழங்குவது, கல்விக் கடன் - நகைக் கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை 1,500 ஆக உயர்த்துவது, 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக அதிகரிப்பது உள்பட 505 வாக்குறுதிகளையும் செயல்படுத்தாதையும், தொடர்ந்து ஏற்படும் மின்சார தடையை நீக்க வலியுறுத்தியும் திமுக அரசைக் கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டத்தை அதிமுக அறிவித்தது.
இந்தப் போராட்டத்தை, கரோனா காலம் என்பதால், அவரவர் வீட்டு முன் நின்று குரல் எழுப்ப வேண்டும் என அதிமுக தலைமை வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி.எஸ், போடியில் உள்ள தனது வீட்டின் முன் கட்சிப் பொறுப்பாளர்கள் சிலருடன் கண்டன பதாகைகளைக் கையில் வைத்துக்கொண்டு ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிர்ப்பாக போராட்டக் குரலை எழுப்பினார். அதில் ‘கரோனா நோய்க்கு உரிய சிகிச்சை கொடு’, ‘பெட்ரோல் - டீசல் விலை என்னாச்சு’, ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று’, ‘மக்கள் நலனை மறந்துவிட்டு பொய் வழக்குப் போடும் திமுக அரசைக் கண்டிக்கிறோம்’.
‘போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே’, ‘உண்மையைச் சொல்ல பயிற்சி எடு’ என திமுக அரசுக்கு எதிராக பல கண்டன குரல்களை எழுப்பினார். இதில் மாவட்டச் செயலாளர் சையது கான் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அதுபோல் தேனி பாராளுமன்ற உறுப்பினரும் ஓ.பி.எஸ் மகனுமான ரவீந்திரநாத், தேனியில் திமுக அரசைக் கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடத்தினார். இதில் நகர ஒன்றியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.