அ.தி.மு.க.வின் நிறுவனரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் நேற்று அதிமுக சார்பிலும், அவரது ரசிகர்கள் சார்பிலும் கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க. சார்பில், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கேக் வெட்டி விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஊட்டி விட்டார்.
அதேபோல், அ.தி.மு.க. வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நாளை (19ம் தேதி) எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, அந்தப் பொதுக்கூட்டம் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அன்றைய பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்பு பேருரை ஆற்றுவார் என்றும் அ.தி.மு.க. சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.