ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் போட்டியிடுகிறார்கள். அதே போன்று நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களைக் களமிறக்கி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு குக்கர், வெள்ளி பொருட்கள் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை கொடுத்து வாக்கு சேகரித்து வருவதாகவும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. ஆனால், இதனைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடிக்கவில்லை எனவும் ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து, தண்டனை பெற்றுத்தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு ரூ.1 கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.