Skip to main content

கதறி அழுத நகர செயலாளர்... ஆறுதல் கூறி அனுப்பி வைத்த கே.என்.நேரு...

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

 

தமிழக அரசியலில் தேர்தலில் வெற்றி பெறுபவர்களைவிட கட்சியில் பொறுப்பில் இருப்பவர்களுக்குத்தான் அதிக அதிகாரம் மற்றும் கட்சியின் செல்வாக்கு இருக்கும். இந்த கட்சி அதிகாரத்திற்காக அரசியலில் பலவிதமான போட்டிகளும் பொறாமைகளும், சதிதிட்டங்களும் நடக்கும். அரசியல் ஆடுகளத்தில் சதுரங்க காய் நகர்த்தல்கள் நகர்ந்து கொண்டே இருக்கும்.

 

dmk



புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட பொறுப்பாளரிடம், நகர செயலாளர் அவர்கள் கதறி அழுத சம்பவம் தற்போது திமுக கட்சியினரிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

திருச்சி திமுக மாநகரச் செயலாளர் அன்பழகன். அவருடைய ஆரம்பகட்ட அரசியலில் அன்பில் தர்மலிங்கம் மகன் அன்பில் பொய்யாமொழிக்கு நெருக்கமாக இருந்தவர். அதன் பிறகு கே.என்.நேருவுக்கு நெருக்கமாக மாறினார். அதன் பிறகு கவுன்சிலர், துணை மேயர் உள்ளாட்சி பொறுப்புகளின் உச்சத்திற்கு சென்றார்.
 

திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட வாய்ப்பு தருமாறு பலமுறை கேட்டு ஒவ்வொரு முறையும் தோழமை கட்சிக்கு ஒதுக்கப்படுவதால் கடைசியாக எம்.பி. தேர்தலுக்கு வாய்ப்பு கிடைத்து தோற்றுப் போனார்.
 

திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும்போது தனக்கு கண்டிப்பாக கட்சியில் மாவட்ட அளவுல் பதவி கிடைக்கும் என்று மிக உறுதியாக நம்பினார். அவருக்காக கே.என்.நேரு, என்னுடைய இடத்தை அன்பழகனுக்கு கொடுங்கள் என்று தலைமையிடம் சிபாரிசு செய்தார்.
 

ஆனால் பொய்யாமொழி மகன் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டதால் பயங்கர அப்செட் ஆனார். இந்த நிலையில் திருச்சி மாநகரத்தில் உள்ள தொகுதிகள் பிரிந்து போனதால் தற்போது தன்னுடைய மாநகர செயலாளர் பதவியும் செல்லாக்காசு ஆகிவிடும் என்பதை உணர்ந்ததும் இன்னும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.
 

இந்த நேரத்தில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, அன்பழகன் வீட்டிற்கு வாழ்த்து பெறுவதற்காக சென்றார். அப்போது வைரமணியை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு கதறி அழ ஆரம்பித்தார். வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்த்து சென்ற புதிய மாவட்ட பொறுப்பாளருக்கு பெரிய தர்மசங்கடமானது. என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தார்.


 

 

அன்பழகன் சென்னைக்கு சென்றபோதும், இதேபோல் கே.என்.நேருவிடமும் கதறி அழுதிருக்கிறார். அப்போது நேரு, வரும் தேர்தலில் எம்எல்ஏ சீட்டு கிடைக்கும், கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். 
 

தனக்கு பதவி கிடைக்கும் என்று கடைசி வரை நம்பிக்கையோடு அன்பழகன் இருந்தார். பதவி கிடைக்காததால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் அப்செட்டாகி உள்ளார் என்கிறார்கள் அன்பழகனுடன் இருப்பவர்கள். 
 

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கின்றனர் கட்சிக்காரர்கள்.

 

சார்ந்த செய்திகள்