வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதாகக் கூறப்படுகிற நிலையில் பொன்னையாற்றின் கொக்கரி பகுதியில் மர்ம கும்பல் ஒன்று மணல் கடத்தி சென்றுள்ளது. அப்போது கொக்கேரி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் உமாபதி மணலைக் கடத்திச் சென்ற லாரியைத் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார்.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த அந்த கும்பல் லாரியிலிருந்து கீழே இறங்கி, எதற்காக செல்போனில் படம் எடுக்குற என்று மிரட்டியுள்ளனர். நீங்கள் மணல் கடத்துவதால்தான் வீடியோ எடுப்பதாக முன்னாள் ராணுவ வீரர் கூற, லாரியிலிருந்து அரிவாளை எடுத்து அவரை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளனர். அதில் தலையில் பலத்த காயமடைந்த ராணுவ வீரரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கொக்கேரி பகுதியைச் சேர்ந்த முனுசாமி, குமரேசன், நவீன் மற்றும் சூர்யா என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து பாமக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் சின்ன தோட்டாளம் என்ற இடத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவல்துறை சிறப்பு சார் ஆய்வாளர் மணவாளன் என்பவரை மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி, கொலை செய்ய முயன்றுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு பகுதியில் பொன்னையாற்றிலிருந்து மணல் கொள்ளையடிக்கப்படுவதை படம் பிடித்த ஓய்வு பெற்ற இராணுவ வீரரும், சமூக ஆர்வலருமான உமாபதி என்பவரை மணல் கடத்தல் கும்பல் அரிவாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளது. ஒரே மாவட்டத்தில், ஒரே இரவில் நிகழ்ந்துள்ள இரு தாக்குதல்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இயற்கை வளங்களை பாதுகாக்க முயலும் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் சேகர் என்பவர் இரு நாட்களுக்கு முன் தாக்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு மணல் கொள்ளையை தடுத்த ஆயக்குடி கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி உள்ளிட்ட நான்கு அதிகாரிகளை ஊர்திகளை ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்தது. இந்த இரு நிகழ்வுகளால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன்பே மணல் கொள்ளையை தடுக்க முயன்றவர்கள் மீது அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதிலிருந்தே தமிழ்நாட்டில் மணல் கொள்ளை எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டது, சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கிராம நிர்வாக அலுவலரை வெட்ட அரிவாளுடன் துரத்தியது என மணல் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாக தெரியவில்லை. தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல் காரர்கள் என்பார்கள்... ஆனால், இப்போது தண்டல்காரர்கள் எல்லாம் தடி எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். உடனடியாக இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆற்று மணல், சவுடு மண் என அனைத்து வகையான இயற்கை வளங்களும் கட்டுப்பாடின்றி கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை தடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை உணர்ந்து தமிழகத்திற்கு மாபெரும் கேடாக மாறி வரும் மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.