மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது கவனத்திற்கு வந்த சில பிரச்சினைகள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பில் நீடிக்கும் மர்மங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை ஆகியவை தொடர்பான மனுவை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்களை நேரில் சந்தித்துக் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் பேசியதாவது, “ஸ்ட்ராங் ரூம் என்பது உண்மையான ஸ்ட்ராங் ரூமாக இருக்க வேண்டும்.
சிசிடிவி கேமராக்கள் அவ்வப்போது செயலிழப்பதும், மர்ம கண்டெய்னர் வளாகத்தில் நுழைவதும், திடீர் தீடீரென வைஃபை வசதிகள் வளாகத்தின் உள்ளும், வெளியூம் உருவாகுவதும், லேப்டாப்புடன் மர்ம நபர்கள் நடமாடுவதும், மின்சராத் தடை ஏற்படுவதும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் விதிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் முறையாக நடத்தப்பட்டு, முடிவுகள் சரியாக அறிவிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை மக்களிடத்திலும், வேட்பாளர்கள், அரசியல்வாதிகளின் மத்தியிலும் உருவாக்குவதும் தேர்தல் ஆணையத்தின் கடமை.
ஏற்கனவே 30 சதவீத வாக்காளர்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதில்லை. அதேபோல் வாக்குப்பதிவிலும், வாக்கு இயந்திரத்திலும் இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தால், வாக்கு சதவீதம் குறையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும். வாக்காளர் பட்டியல் குளறுபடிகளையும் புகாராக அளித்திருக்கிறோம். இது முதல் கட்டம் மட்டுமே. இன்னும் அதிக புகார்கள் இருக்கின்றன, மற்றும் வந்த வண்ணம் உள்ளன. அதையும் திரட்டி உங்கள் முன் கொண்டு வருவோம். இது ஜனநாயகத்தைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி; எங்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் அல்ல.
மேலும், தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரத்தைக் கையாளுவதிலும், பாதுகாப்பதிலும் தவறு உள்ளது என்பதுதான் எங்களின் புகார். அதைப் புகாராக கூற விரும்பவில்லை, அதனால் பரிந்துரைகளாக கொடுத்திருக்கிறோம். மொத்தம் 75 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில், இந்தப் புகார் அனைத்து இடங்களுக்கும் பொருந்துமா என்றால், விருந்தில் உண்ண தகாத ஒன்றை எந்த ஓரத்தில் வைத்தாலும் தவறு. அது போன்றுதான் இதுவும். அதனால் அது வாழை இலையிலே வரக்கூடாது” என்றார்