உள்ளாட்சி தேர்தலை மூன்று கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில், 2016 அக்டோபரில் நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தல், கடைசி நேரத்தில் ரத்தானது. இதனால் வருகிற டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு திமுக, அதிமுக மற்றும் சில அரசியல் கட்சிகள் தற்போது இருந்தே சில வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதிலும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால் அதிமுக நிர்வாகிகள் பலரும் உள்ளாட்சி தேர்தலில் சீட் வாங்க போட்டி போடுவதாக கூறுகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி ஒரு சில கண்டிஷன்கள் போட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
அதில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் சம்மந்தமாக ஒரு பட்டியலை தயார் செய்யுங்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார். அப்போது வேட்பாளர்கள் பட்டியலில் எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் தலையீடு எதுவும் இருக்காது என்றும், மக்கள் செல்வாக்கு உள்ள வேட்பாளராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியலில் ஏதும் தவறுகள் மற்றும் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டால் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் கட்சி நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் வாங்கலாம் என்று நினைத்து இருந்த அதிமுக நிர்வாகிகள் பலருக்கும் எடப்பாடியின் இந்த உத்தரவு முட்டுக்கட்டை போட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் புலம்புவதாக சொல்லப்படுகிறது.