கரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் ஊரடங்கைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அடிக்கடி தொடர்புகொள்ளும் பிரதமரிடம் தெரிவித்திருப்பதாக அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்திருந்தார். அதுபோல் டாக்டர் ராமதாசும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் வரக்கூடாது என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ட்விட்டர் வழியாக கருத்து சொன்னாலும், தைலாபுரத்திலிருந்து இருவரும் வெளியே வரவில்லை என்கின்ற கவலையும், வன்னிய சமூக மக்கள் அதிகமுள்ள வட மாவட்டங்களில் கூட நிவாரண உதவிகளை வழங்க பா.ம.க. முன்வரவில்லை என்கின்ற வருத்தமும், தங்களைக் கூட பெரியய்யாவும் சின்னய்யாவும் விசாரிக்கவில்லை என்கின்ற ஆதங்கமும் பா.ம.க. நிர்வாகிகளிடம் இருக்கிறது. தைலாபுரத் தரப்போ, டாக்டர்களான இருவரும் கரோனாவின் டேஞ்சரசை உணர்ந்ததால்தான் அவங்க ரெண்டுபேரும் தங்கள் பாதுகாப்பைக் கருதி வெளியே வரவில்லை என்று கூறுகின்றனர். அதோடு, பூரண மதுவிலக்கையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பா.ம.க.
இந்த நிலையில் கரோனாவால் டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டதால், கள்ளச் சாராயம்- குக்கர்சாராயம் என்று ஆங்காங்கே காய்ச்சப்பட்டாலும், பெரிய அளவுக்குச் சட்டம் ஒழுங்கு பாதிப்பு வராததைச் சுட்டிகாட்டும் அன்புமணி, இந்த நிலையைத் தொடரச் செய்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என்று எடப்பாடியிடம் வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார். தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியைத் தொடர்வதா வேண்டாமா என்பதை இந்த மது விலக்கு விவகாரத்தை வைத்துதான் பா.ம.க. முடிவெடுக்க போவதாகச் சொல்லப்படுகிறது.