கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,761லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. இதில் 239 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 643 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,574, தமிழகத்தில் 911, டெல்லியில் 903, ராஜஸ்தானில் 553, தெலங்கானாவில் 473, கேரளாவில் 364, ஆந்திராவில் 363, கர்நாடகாவில் 207 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் ரூ.16,000 கோடி கேட்ட நிலையில், ரூ.510 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கினால் அதைக் கொண்டு என்ன செய்ய முடியும்? கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்!@PMOIndia @CMOTamilNadu #COVID19
— Dr S RAMADOSS (@drramadoss) April 10, 2020
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய அரசு கரோனா வைரஸ் நடவடிக்கைக்கு கொடுத்த நிதி குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் ரூ.16,000 கோடி கேட்ட நிலையில், ரூ.510 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கினால் அதைக் கொண்டு என்ன செய்ய முடியும்? கரோனா தடுப்பு பணிகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 35,198 பேருக்கு கரோனா தொற்று, 2,381 பேர் உயிரிழப்பு என்ற புள்ளிவிபரம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவே இத்தகைய பேரழிவைச் சந்திக்கும் போது, நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள சமூகஇடைவெளி தான் ஒரே தீர்வு. ஊரடங்கைக் கடைப்பிடிப்போம்; உயிர் காப்போம் என்றும், உலக அளவில் கரோனா வைரஸ் தாக்குதல் 15 லட்சத்தைத் தாண்டியுள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. கரோனாவால் உயிரிழப்பு விகிதம் 2% க்குள் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அளவுக்கு உயிரிழப்புகள் அதிகரிப்பது கவலையளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.