எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். சட்ட போராட்டம் ஒரு புறமும், மக்களை சந்திக்கும் புரட்சி பயணம் ஒரு புறமும் தொடரும். இன்று ஏற்பட்டுள்ள சூழலை பொறுத்தவரையில் எப்போதும் கூறி வந்ததைப் போல எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என்பதை மீண்டும் அவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே வெளிப்படுத்தியுள்ளார்.
அரசியலில் நம்பகத்தன்மை என்பது ஒரு தலைவருக்கு அடிப்படை பண்பு. மக்கள் சார்பாக நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் தான் தர வேண்டும். அந்த நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கு உரியவர் ஓபிஎஸ். நம்பகத்தன்மை அற்றவர் யார் என்பதை இந்த நாடும் உலகமும் அறியும்” எனத் தெரிவித்தார்.