இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், பெகாஸஸ் உள்ளிட்ட பிரச்சனைகளையும் மக்கள் பிரச்சனைகளையும் பேச அனுமதி அளிக்கவில்லை எனக் கூறி எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலளர் இரா. முத்தரசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு, “மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றுகிற ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து வருகிற 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதிவரை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரம் மற்றும் கிராமங்கள் தோறும் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படும். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும்” என அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (25.08.2021) காலை 11 மணிக்கு, வடசென்னை மாவட்டம், பெரம்பூர் தொகுதி வியாசர்பாடி, முல்லை நகர் பஸ் நிறுத்தம் முன்பு மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நா. பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர் எம்.எஸ். மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.