கரோனா நெருக்கடி காலத்திலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்துள்ள சூழலிலும் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதைத் தடுக்காத மத்திய மோடி அரசைக் கண்டித்து இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களை கேட்டுக்கொண்டது அகில இந்திய காங்கிரஸ் தலைமை.
இந்த நிலையில், தலைமையின் உத்தரவை நிறைவேற்றும் வகையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இயங்கும் மத்திய அரசின் தபால் நிலையம் அருகே சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சேப்பாக்கம் பகுதி தலைவர் தணிகாசலம், திருவல்லிக்கேணி பகுதி தலைவர் ஜெ.வாசுதேவன்,
மாவட்ட நிர்வாகிகள் யுவராஜ், முன்னாள் கவுன்சிலர் புலவர் ஆறுமுகம், சேப்பாக்கம் அன்பழகன், எஸ்.பி.சாரதி, பொன்வண்டு ரவி, செரிப், தமிழ்வாணன், நேதாஜி, வட்டத் தலைவர்கள் தணிகைவேல், சலாவுதீன், நாகராஜ், எபி, கமல், அப்பாஸ், மணிபாலன், சரத்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மோடி அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர் கதர் சட்டையினர்.