மக்கள் மீது சுமையை ஏற்றி, கடுமையான வரி விதிக்கப்படுவதாகவும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து, விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவின் கோரப் பிடியில் சிக்கியதால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கண்ணுக்குத் தெரியாமல் கலால் வரியை உயர்த்தி, வருமானத்தைப் பெருக்கி, நிதி பற்றாக்குறையைப் போக்குவதற்கு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கலால் வரியை உயர்த்தியிருக்கிறது.
மே 2014இல் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த போது ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 9.48 ஆகவும், டீசலில் ரூபாய் 3.56 ஆகவும் மிக மிகக் குறைவாக இருந்தன. ஆனால், தற்போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 32.98 ஆகவும், டீசலில் ரூபாய் 31.83 ஆகவும் படிப்படியாகக் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கூடுதல் கலால் வரி பெட்ரோல் மீது ரூபாய் 2 உயர்த்தியதோடு, சாலை செஸ் வரி ஒரு லிட்டருக்கு ரூபாய் 8 ஆக உயர்த்தியிருக்கிறது" எனக் கூறியுள்ளார்.