Skip to main content

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக காம்பவுண்டு சுவரை இடித்த தமிழ அரசு !

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

 

periyar

 

நேற்று திருச்சியில் திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தை ஆக்கிரமிப்பு அகற்றம் என்கிற பெயரில் தமிழக நெடுஞ்சாலைதுறை இடித்து தள்ளியது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, பெரியார் தொடக்கப் பள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, முதியோர் இல்லம் முதலிய நிறுவனங்கள் இயங்கிக் கொண்டுள்ளன.

தந்தை பெரியார் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கல்வி வளாகம், அன்னை மணியம்மையார் காலத்தில் மேலும் வளர்ந்து, ஒரு மாபெரும் கல்விச் சோலையாக மக்கள் மத்தியில் நம்பிக்கையையும், நன்மதிப்பும் பெற்று சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

அரை நூற்றாண்டுக் காலமாக தந்தை பெரியார் காலத்திலிருந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தக் கல்வி வளாகத்தின் சுற்றுச்சுவர் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான 1.80 மீட்டர் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறதென்றும், ஆகவே, நீங்களே அகற்ற வேண்டும் என்றும் திருச்சிராப்பள்ளி உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்திலிருந்து கடந்த 6.3.2019 அன்று நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றது. 

அந்தக் கடிதத்திற்கு 11.3.2019 அன்று கீழ்க்கண்டவாறு பதிலிறுக்கப்பட்டுள்ளது. 

``மேற்படி நிலம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்குச் சொந்தமானது. மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள சர்வே எண்கள் எங்களுக்குச் சொந்தமானது இல்லை; ஆக்கிரமிப்பு உள்ளது என்பதை சர்வே செய்யாமலேயே எப்படிக் கூறுகிறீர்கள்?

அப்படி நீங்கள் சர்வே செய்வதாக இருந்தால், நாங்கள் இல்லாமல் எப்படி சர்வே செய்தீர்கள்? இந்த நிலையில் 7 தினங்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்துள்ளீர்கள்.

எங்கள் நிறுவனத்தை சற்றும் பொருட்படுத்தாமல் இந்த முடிவை எடுத்துள்ளீர்கள். நாங்கள் எந்த நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. தேவையென்றால் தாங்கள், சர்வேயர் மூலம் எங்கள் முன்னிலையில் நிலத்தை அளந்து கொள்ளலாம். அதைவிடுத்து தாங்கள் தவறாக ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்`` என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் திருச்சி உதவி கோட்டப் பொறியாளர் அவர்களுக்கு 11.3.2019 நாளன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். கோட்டப் பொறியாளருக்கு இதன் நகலும் அனுப்பப்பட்டது.

மேலும் 15.3.2019 அன்று மீண்டும் ஒரு கடிதம் திருச்சிராப்பள்ளி உதவி கோட்டப் பொறியாளருக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது: 

``பார்வை 2 இல் கண்டுள்ள கடிதத்தின்படி மாநகராட்சி சர்வேயர்கள் வந்து எங்கள் இடத்தை மதியம் 2 மணியளவில் அளந்தார்கள். பார்வை 1 இல் கண்ட தங்கள் கடிதத்தில் 1.80 மீட்டர் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறியிருந்தீர்கள். ஆனால், தற்போது அளந்ததில் அதைவிடக் கூடுதலாக 6 மீட்டர் அளவு ஆக்கிரமிப்பு இருப்பதாக சர்வே இன்ஸ்பெக்டர் கூறுகிறார்.

எங்களின் பார்வையில் அளந்தது எதுவும் சரியில்லை என்பதாகவும், எனவே சரியான அளவுகளுடன் கூடிய அடிப்படை ஆவணங்களை (Basic Records) ஒப்பிட்டு, மீண்டும் அளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் அதுவரை பார்வை 1 இல் கண்டுள்ள தங்களது கடிதத்தின் மேல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்`` என்று திருச்சி உதவி கோட்டப் பொறியாளருக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி.வீரமணி அவர்கள் 15.3.2019 நாளிட்டு கடிதம் எழுதியுள்ளார். அதன் நகல் கோட்டப் பொறியாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர், சென்னை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதில் கவனிக்கப்பட வேண்டியது ஒருமுறை 1.80 மீட்டர் என்றும் இன்னொரு முறை 6 மீட்டர் ஆக்கிரமிப்பு என்றும் முரண்பாடாக சர்வே செய்யப்பட்டது எப்படி? இதில் எது உண்மை? மேலும் கடிதத் தொடர்பு இருந்து கொண்டு இருக்கும் போதே, திடீரென்று அன்னை மணியம்மையார் நினைவு நாளான நேற்று (16.3.2019) அவர்கள் கண்ணிமையாக கட்டிக்காத்த பெரியார் கல்வி நிறுவன வளாகத்தின் சுவர்களை பொக்லைன் கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 

இரண்டு முறை சர்வே செய்த போது குறிப்பிடப்பட்ட ஆக்கிரமிப்பின் அளவு முரண்பாடாக இருக்கிறது. எனவே, நெடுஞ்சாலைத் துறையில் உள்ள சாலை வரைபடத்தை காட்ட வேண்டும் என்றும், நெடுஞ்சாலைத் துறையின் கல்லிலிருந்து அளவிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டபொழுது, அதையெல்லாம் காட்டவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தான்தோன்றித்தனமாக இடிக்கப்பட்டுள்ள - பெண்கள் அதிகம் படிக்கும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்புச் சுற்றுச்சுவரை இடித்ததில், எந்த அளவும் நியாயம் இல்லை. இதன் பின்னணியில், அரசியல் நோக்கம் இருக்கிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

6.3.2019 நாளிட்ட கடிதத்தில் நேரில் தெரிவித்ததாக சொல்லப்படுவது என்பதெல்லாம் உண்மையல்ல. நேரில் யாரிடம் தெரிவித்தார்கள்? தெரிவித்தவர்கள் யார்? என்ற விவரம் இல்லாமல் மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்பதுபோல பொறுப்பு வாய்ந்த அதிகாரி எழுதலாமா? இது அப்பட்டமான பொய்யைத் தவிர வேறு அல்ல.

மேலும் பெறுநர் என்பதில் பெரியார் ஸ்கூல், சுந்தர் நகர், சாத்தனூர் என்று இருக்கிறது. அந்தக் கல்வி நிறுவனம் எந்த நிறுவனத்துக்குச் சொந்தமானது - யாருக்குக் கடிதம் அனுப்பப்படவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் கடிதம் எழுதுவது பொறுப்பற்ற காரியம் அல்லவா!

ஏதோ அவசர கதியில் இடித்துத் தள்ளவேண்டும் என்ற வெறியில் யாரோ சிலரின் கண்ணசைப்பில் நடந்ததாகத்தான் இதனைக் கருதவேண்டியுள்ளது.

இந்தக் கல்வி வளாகத்துக்குள் பெண்கள் விடுதி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம் (பெண்கள்) முதலியன இயங்கி வருகின்றன. சுற்றுச்சுவர் பெண்களுக்குப் பாதுகாப்பானது என்று நன்கு தெரிந்திருந்தும் கண்மூடித்தனமாக இடித்துத் தள்ளியதன் காரணமாக பெண்கள் பாதுகாப்பு என்ற முக்கிய பிரச்சினை அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விபரீதம் எதுவும் நடந்தால், அதற்கு நெடுஞ்சாலைத் துறையும், தமிழக அரசும்தான் பொறுப்பாகும்.

தஞ்சை வல்லத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழக வளாகத்தில் - திறந்தவெளி சிறைச்சாலைக்கான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன - அவற்றை உடனடியாக அகற்றிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், இதுவரை துரும்பளவும் நடவடிக்கையை எடுக்காத இந்த அ.இ.அ.தி.மு.க. அரசு பெரியார் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளுகிறது என்றால், இந்த அரசு யாருக்கான அரசு என்பது திட்டவட்டமாகவே தெரிகிறது.

அன்று டில்லியில் பி.ஜே.பி. ஆட்சியில் பெரியார் மய்யத்தை சட்ட விரோதமாக இடித்துத் தள்ளியதுபோல, (அதன் பின்விளைவு அரசின் நடவடிக்கை தவறானது என்று ஆனது) இன்று அ.இ.அ.தி.மு.க. அரசு அரசியல் நோக்கத்தோடு இந்த சட்ட விரோத, நியாய விரோத அழிபழி செயலில் இறங்கி உள்ளது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும். 

இதன்மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கழகத் தோழர்களும், பொதுமக்களும் ஆத்திரப்படாமல், அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். என்று அறிக்கை கொடுத்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்