திமுக அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் இன்று சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் டிசம்பர் 21ல் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். நீதிபதி முன் நின்ற பொன்முடி மற்றும் அவர் சார்பிலான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பொன்முடி மற்றும் அவரது மனைவியின் வயது, மருத்துவ காரணங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை இழந்துள்ளார் பொன்முடி.
பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வருவாய்க்கு மீறி சொத்து குவித்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம்.
அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது' என தெரிவித்துள்ளார்.