மணப்பாறையில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு புதன்கிழமை (27.10.2021) வந்திருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், “கரோனா காலத்தில் உயிரிழந்தவர்கள் பலர், அவர்களைப் போல கட்சித் தாவியுள்ளவர்களையும் நினைத்துக்கொள்வோம். சம்பாதிக்க வேண்டுமென கட்சிக்கு வந்தவர்கள் தற்போது பிழைப்பதற்காகச் சென்றுள்ளனர்” என கட்சி மாறிய நிர்வாகிகள் குறித்து பேசினார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில், தேமுதிக விராலிமலை மேற்கு ஒன்றிய தொண்டரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் இல்ல திருமண விழாவிற்கு புதன்கிழமை வந்திருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு, தேமுதிக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பாரதிதாசன் மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. நொச்சிமேடு பகுதியிலிருந்து திருமண மண்டபம் வரை தொண்டர்கள், இருச்சக்கர வாகன பேரணியாக விஜயபிரபாகரனை அழைத்துச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபிரபாகரன், “கரோனா காலத்தில் உயிரிழந்தவர்கள் பலர், அவர்களைப் போல கட்சித் தாவியுள்ளவர்களையும் நினைத்துக்கொள்வோம். சம்பாதிக்க வேண்டுமென கட்சிக்கு வந்தவர்கள், தற்போது பிழைப்பதற்காகச் சென்றுள்ளனர். இதனால் எப்போதும் தேமுதிகவிற்குப் பின்னடைவு கிடையாது.
பள்ளிகள் திறக்காமல் இருக்கும் நிலையில், குழந்தைகள் கல்வி கற்கும் முறையினை மறந்து, தேவையான கல்வியை நாம் கொடுக்காததால் செல்ஃபோனில் ஆபத்தான விளையாட்டுகளில் கவனம் செலுத்திவருகின்றனர். முறையான பாதுக்காப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் திறக்க வேண்டும். பள்ளிகள் திறந்துவிட்டால் வீடுதேடி கல்வித்திட்டம் தேவையில்லை. பண்டிகை காலம் முடிந்தபின்பு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து அடுத்தக்கட்ட கூட்டணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும்” என்று கூறினார்.
நிகழ்ச்சியின்போது, தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பாரதிதாசன், புதுகோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணி, திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் குமார், மாநகர மாவட்டச் செயலாளர் கணேஷ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.