‘நான் முதல்வராகப் பொறுப்பேற்ற காலம் பேரிடர் காலம் தான். இல்லை எனச் சொல்லவில்லையே’ என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் பால் விலையுயர்வு ஆகியவற்றைக் கண்டித்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. கட்சியின் பல்வேறு தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் இந்தப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினர். திருச்சி, ஈரோடு, சத்தியமங்கலம், தேனி அரியலூர், திருச்செந்தூர், புதுக்கோட்டை, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
சேலம் ஆத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சட்டமன்றத்தில் ஜெயலலிதா சொன்னார், ‘எனக்குப் பின்னாலும் அதிமுக 100 ஆண்டுக்காலம் தொடரும்’ என்று. அது நடந்து கொண்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். நான் முதல்வராக இருந்த நான்கு ஆண்டுக்காலமும் பேரிடர் காலம் எனச் சொல்லுகிறார்கள்.
ஆம், நான் முதல்வராகப் பொறுப்பேற்ற காலம் கடுமையான வறட்சி நிலவியது. ஆனாலும் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தடையில்லா குடிநீர் கொடுத்தோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2500 கோடி ரூபாய் நிவாரணம் அளித்தோம். விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தோம். கஜா புயலின்போது புயல் வேகத்தில் செயல்பட்டு அதன் அடிச்சுவடு தெரியாமல் சீர் செய்தோம்.
சொத்து வரியை உயர்த்தமாட்டோம் என வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், அதைக் காற்றில் பறக்கவிட்டார்கள். நகர்ப்புறத்தில் வீட்டு வரி 100% உயர்ந்துவிட்டது. கடை வரி 150% உயர்ந்துவிட்டது. கொரோனா காலகட்டம் முடிந்து 2 வருடங்கள் ஆகி, மெல்ல மெல்லத் தொழில் மீண்டும் துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் தாக்குப் பிடிக்க முடியாத அளவிற்கு வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல்தான் மின்கட்டண உயர்வு. இதற்கு முன் மின்சாரத்தைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும். இப்பொழுது மின்கட்டணத்தைக் கேட்டாலே ஷாக் அடிக்கிறது” என்றார்.