"புறக்கணிப்போம் புறக்கணிப்போம் இஸ்லாமியர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் அ.இ.அ.தி.மு.க திருச்சி மாவட்ட கழக செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி பாலக்கரை பகுதி செயலாளர் ஜனாப் கலீல் ரகுமானை பதவியில் இருந்து எடுத்து இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் அமைச்சரையும் அதிமுகவினரையும் சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம் புறக்கணிப்போம்" என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் சார்பாக திருச்சி மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்து போது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.கவிற்கு புதியதாக பகுதி செயலாளர்கள் அறிவிப்பு வெளியானது.
அதில் பாலக்கரை பகுதி செயலாளராக இருந்த கலீல் ரகுமான் நீக்கப்பட்டு புதிய பகுதி செயலாளராக
சுரேஷ் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் காரணமாகவே இப்போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது என்றனர்.
இந்த போஸ்டர்கள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது
என்பதால், "நன்றி! நன்றி! நன்றி! கரோனா பேரிடர் காலத்தில் சுமார் 3,000 இஸ்லாமிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கிய மாண்புமிகு அன்பு அண்ணன் வெல்லமண்டி நடராஜன், சுற்றுலாத் துறை அமைச்சருக்கு மனமார்ந்த நன்றி! நன்றி! நன்றி! என இஸ்லாமிய அ.தி.மு.க நிர்வாகிகள் பெயருடன் திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க போஸ்டரும் திருச்சியில் பதிலுக்கு ஒட்டியுள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது.