கரோனா நிவாரணத்துக்காக தி.மு.க. கையில் எடுத்திருக்கும் 'ஒன்றிணைவோம் வா’ திட்டம் பற்றி எடப்பாடி அரசுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருப்பதாகச் சொல்கின்றனர். அதாவது, தி.மு.க.வுக்கு எதிரான நிலவரம் என்று எதாவது ஒரு ரிப்போர்ட்டை எடப்பாடிக்கு அனுப்பி, அவர் மனதைக் அடிக்கடி உளவுத்துறை குளிர வைப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது "ஒன்றிணைவோம் வா' என்கிற திட்டத்தைத் தொடங்கிய தி.மு.க, 5 நாட்களிலேயே 2 லட்சம் பேர், தங்களிடம் கரோனா நிவாரண உதவியை எதிர்பார்த்துத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்து இருந்தது.
இதைச் சுட்டிக் காட்டிய உளவுத்துறை, தி.மு.க கொடுத்த ஒரு ஹெல்ப் லைன் மூலம், அதிகபட்சமா 86,400 பேர்தான் தொடர்பு கொண்டிருக்க முடியும் என்று தன் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டு கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த கோட்டை வட்டார அதிகாரிகள், ஹெல்ப் லைன் மூலம் கால்செண்டர் பாணியில் ஒரே நேரத்தில் ஒரு எண்ணில் பலபேர் பேசமுடியும். அரசின் 108 தொடங்கி, தற்போது குடும்ப வன்முறை புகார்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஹெல்ப் லைனில் ஏராளமானோர் தொடர்புகொள்ளவில்லையா? அப்படியிருக்க உளவுத்துறை எதற்காக முதல்வரை இப்படிக் குழப்ப வேண்டும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். ஆனாலும், தி.மு.க.வுக்கு எதிரான ரிப்போர்ட்டுகளை உளவுத்துறை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.