கடந்த இரண்டு வாரங்களாக திமுக தலைமைக்கும் - பாமக தலைமைக்கும் இடையே வன்னியர்களுக்கு யார் அதிகம் நல்லது செய்தது என்பது தொடர்பாக அறிக்கை யுத்தம் நடைபெற்று வருகிறது. தற்போது அது கொஞ்சம் ஓய்ந்த நிலையில் சமூக வளைத்தளங்களில் அந்த யுத்தம் ஓயவில்லை. திமுகவினர் பாமகவினரை விமர்சிப்பதும், பாமகவினர் திமுகவினரை கடுமையாக விமர்சிப்பதுமாக போய்க்கொண்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அய்யனூர் கிராமத்தை சேர்ந்த அசோகன். திமுகவில் அணி ஒன்றில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். முகநூலில் அய்யனூர் அசோகன் என்கிற பெயரில் உள்ளார். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்சை விமர்சனம் செய்துள்ளார். இது எங்கள் மனதை புண்படுத்திவிட்டது எனச்சொல்லி கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி பாமகவை சேர்ந்த சிலர், ஆம்பூர் காவல்நிலையத்தில் புகார் மனு தந்துள்ளார்கள். அதில், எங்கள் கட்சியின் நிறுவனரை மோசமாக விமர்சித்தவரை கைது செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர்.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய திமுகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த சிலர், பாஜக, மோடி, ஆர்.எஸ்.எஸ் பற்றி விமர்சனம் செய்தால் உடனே அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கு போட்டு அவர்களை நசுக்கி கருத்து சுதந்திரத்தை பறித்து வருகிறார்கள். பிரபலமான கல்புர்கி போன்றவர்கள் விமர்சிக்கும் போது, கொலை செய்கிறார்கள். பிரதமருக்கு கடிதம் எழுதிய இந்தியாவின் பிரபலமான மூத்த படைப்பாளிகள் 46 மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வைத்தார்கள். தற்போது பிரதமரை நோக்கி சாதாரணமாக கேள்வி எழுப்பிய 6 கல்லூரி மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்கியுள்ளார்கள். இப்படி கேள்வி கேட்பவர்களை நசுக்கும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள பாமக, தங்களை நோக்கி கேள்வி எழுப்புகிறவர்களை அடக்க துடிக்கிறது.
அதிகாரம் தன்னிடம்மில்லை, அதிகாரத்தில் உள்ள பாஜக, அதிமுக வுடன் கூட்டணியில் இருப்பதால் கேள்வி எழுப்புபவர்களை, விமர்சனம் செய்பவர்களை நோக்கி புகார் செய்து முடக்கபார்க்கிறார்கள். திமுகவினராவது அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தான் விமர்சனம் செய்கிறார்கள். பொய்களை பரப்புவதோடு, தனிமனித தாக்குதல் நடத்துவது பாமகவினர் தான். அதுப்பற்றிய ஸ்கிரீன் ஷாட்களை நாங்களும் எடுத்து வருகிறோம். நாங்கள் அவர்கள் தரும் வழக்கினை சட்டரீதியாக சந்திப்போம், பொய்யாக ஜோடித்து கொண்டிருந்தால், நாங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது அவர்களை யாரும் காப்பாற்ற முடியாது. ஏன் எனில் அவர்கள் அத்தனை வன்மத்தில் பதிவுகளை செய்துள்ளார்கள் என்றார்.