சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “மதுரையில் எந்த ஒரு தொழிலும் இல்லை. மதுரைக்கு மெட்ரோ ரயில் வருகிறது எனச் சொல்கிறார்கள். அதற்கான பூர்வாங்கப் பணிகளைச் செய்கிறார்கள். ஆனால், எந்த தொழிலும் இல்லாமல் மெட்ரோ ரயில் வந்து என்ன செய்வது. குறிப்பிடும் அளவிற்கு ஒரு தொழிற்சாலையும் இல்லை.
அமைச்சர் 600 கோடி ரூபாய் பொருட்செலவில் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அனைவரும் பாராட்டும் படி தொழிற்துறை அமைச்சர் கொண்டு வரவேண்டும். மதுரை மக்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என அமைச்சர் தென்னரசுவை பாராட்ட வேண்டும்” எனக் கூறினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர், “10 வருடம் அமைச்சராக இருந்து ஒன்றும் இல்லை என வருத்தப்படுகிறீர்கள்” என்றார். செல்லூர் ராஜூவின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “உள்ளபடியே மதுரை மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அத்தனை பேரும் செல்லூர் ராஜூவைப் பார்த்து ஆஹா ஓஹோ எனச் சொல்கிறார்கள். கொஞ்ச நாள் முன்னால் செல்லூர் ராஜூ படம் ஒன்று வந்தது. நாம் புலியைப் பார்த்தால் தூரம் ஓடிப்போவோம். மதுரையில் எல்லோரும் மாடு தான் பிடிப்பார்கள். செல்லூர் ராஜூ புலியின் வாலைப் பிடித்தார். மதுரைக்காரர்கள் விவரமாக இருக்கிறார்கள். புலியின் வாய்ப்பக்கம் நிற்காமல் புலியின் வால் பக்கம் நின்று பிடித்திருந்தார். அவ்வளவு திறமை இருக்கும் செல்லூர் ராஜூ மதுரைக்கு என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் தொழிற்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலமைச்சர் சொல்லிக்கொண்டுள்ளார். அதனால் தான் மதுரைக்கு டைடல் பார்க் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் சிப்காட் தொழிற்சாலை வருவது குறித்தும் அறிவித்துள்ளார்கள். தமிழகத்திற்கு வரும் முதலீடுகளில் அதிகமான முதலீடுகள் தென் மாவட்டங்களை நோக்கி வர இருக்கிறது” எனக் கூறினார்.