ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீதான வழக்கு நீதிபதி நிர்மல்குமார் தலைமையில் இன்று (17.12.2021) விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக நண்பர்கள் மூலம் பணம் பெற்றதற்கு ஆதாரம் வலுவாக இருக்கிறது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. அவரை கைது செய்து காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இருக்கிறது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வைக்கப்படும் பொய்ப் புகார் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இறுதியில் நீதிபதி நிர்மல்குமார், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை முழுமையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.