நாகை மாவட்டம், வேளாங்கன்னியில் அமமுக சிறுபான்மையினர் பிரிவு அணியின் சார்பில் ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்ட் தலைமையில் புதன்கிழமை (22.12.2021) இரவு நடைபெற்றது. பூர்ணகும்ப வரவேற்புடன் துவங்கிய அந்த விழாவில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து பாதிரியார்கள் வழங்கிய குழந்தை இயேசுவை குடிலில் வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் அமமுகவினர் திரளாக கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய டி.டி.வி. தினகரன், “மதம், இனம், ஜாதியின் பெயரால் அமைதி பூங்காவாக உள்ள நமது மாநிலத்தை, நமது நாட்டை அரசியல் காரணங்களுக்காக ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்பதற்காகப் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திவருகின்றனர். சிலர் ஆட்சிப் பொறுப்பில் அமர வேண்டும் என்பதற்காக சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் போல் காட்டிக்கொண்டு இன்று ஆட்சியில் அமர்ந்த பின் அவர்களின் செயல்பாடுகள் என்னவென்று மக்களுக்குத் தெரியும்" என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரனிடம், “கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக விவேக்கை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்களே?” என்ற எழுப்பிய கேள்விக்கு, "கொடநாடு கொலை வழக்கு குறித்து, விவேக்கிடம் விசாரணை நடத்தப்பட்டுவருவது அவரிடம் தகவல்கள் ஏதாவது இருக்கலாம் என்பதால் விசாரணை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். இதை ஒன்றும் நாம் வித்தியாசமாக பார்க்க தேவையில்லை" என்றார்.
அதனைத் தொடர்ந்து, “சிலநாட்களுக்கு முன்பு அதிமுக, பெட்ரோல் - டீசல் விலையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினார்கள். அதில் மத்திய அரசைக் கண்டித்து ஒரு முழக்கம்கூட எழுப்பவில்லையே?” என்று எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அவர், "தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்கள் குதிக்கிறார்கள். அதேபோல் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், ஆளுங்கட்சியாக வந்தால் மத்திய அரசுக்கு இணக்கமாக செல்கின்றனர். இதைத்தான் எதிர்க்கட்சியாக இருக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தற்போது செய்கிறார். மாறி, மாறி குறை கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் மாற மாட்டார்கள். மக்கள்தான் இதற்கான மாற்றத்தை உருவாக்க வேண்டும்" என்றார்.
“வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக - அதிமுக இணைப்பு இருக்குமா” என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், “வாய்ப்பே இல்ல” என்பதுபோல தலையை ஆட்டி பதில்கூறினார்.