ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியுள்ளதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், தரங்கெட்ட அண்ணாமலை எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்பொழுது அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில், இக்கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பாஜகவிற்கு எதிரான போர்க்கொடியாக அல்லாமல் அண்ணாமலைக்கு எதிரான போர்க்கொடி என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்தவுடன் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''நடைபெற்ற கூட்டத்தில் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக காவல் தெய்வமான ஜெயலலிதா ஒன்றரை கோடி தொண்டர்களுடைய மனதிலும், பொதுமக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத, திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அவதூறு கருத்தை பேட்டியாக கொடுத்துள்ளார். இது அதிமுக தொண்டர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவின் முன்னாள் மூத்த தலைவர்கள், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்கள் பலரும் ஜெயலலிதா மீது மரியாதையும், மதிப்பும் கொண்டிருந்தார்கள். தேசிய தலைவருக்கு நிகராக ஜெயலலிதாவை பல தலைவர்கள் அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். பிரதமர் மோடி ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். சென்னையில் ஜெயலலிதாவை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். பாஜக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு மூல காரணமாக ஜெயலலிதா இருந்தார். தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணியை அறிமுகப்படுத்தி 1998ல் முதன் முதலில் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க அரும்பாடுபட்டவர். அதேபோல் 20 ஆண்டுகாலமாக தமிழக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத இருந்த பாஜகவிற்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது நான்'' என்றார்.