நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய பதான் படம் தொடர்பாக நேற்று மக்களவையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஒருவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படம் 'பதான்'. அண்மையில் இணையத்தில் வெளியான இப்படத்தின் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் காவி நிற உடை, கடந்த சில நாட்களாக சர்ச்சையைக் கிளப்பி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், #BoycottPathaan #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கி வருகிறார்கள்.
இது குறித்து மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி பேசிய போது, "பதான் திரைப்படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலரும் கோரிக்கை விடுகிறார்கள். உலமா வாரியத்தில் இருப்பவர்களும் கேட்கிறார்கள். இது ஒரு புதிய வழக்கமாகி விட்டது. சினிமாவுக்கு ஒப்புதல் அளிப்பதையோ , தடை விதிப்பதையோ தணிக்கை குழுவிடம் விட்டுவிட வேண்டும். யாரோ காவி உடை அணிவதால் ஆபத்துக்கு உள்ளாவதற்கு சனாதன தர்மம் பலவீனமானது அல்ல. அதேபோல், இஸ்லாமிய மதமும் பலவீனமானது அல்ல. எனவே, இத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்க கூடாது" என்று பேசியுள்ளார்.