Skip to main content

“ஆரம்பிக்கலாங்களா...” - மநீம தலைவர் கமல்ஹாசன் ஏற்பாடு செய்துள்ள விருந்து

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

Party organized by MNM president Kamal Haasan

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைக் கடந்து தற்போது உத்தரப்பிரதேசம் வந்தடைந்துள்ளது.

 

டெல்லியில் இந்த இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தொண்டர்கள் சிலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசுகையில்,

 

''தமிழில் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது இரண்டு கொள்ளுப் பேரன்கள் சேர்ந்து நடத்தும் யாத்திரை. ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப் பேரன்; நான் காந்தியின் கொள்ளுப் பேரன். மாற்று கொள்கையில் இருந்தாலும் தேச ஒற்றுமைக்காக யாத்திரையில் பங்கேற்றுள்ளேன். நான் இங்கு வருவதற்கு முன்னால் பல பேர் என்னை நீங்கள் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பதால் இந்த யாத்திரையில் கலந்துகொள்ளக்கூடாது., அது உங்களுடைய அரசியல் வாழ்க்கையைப் பாழ்படுத்தும் என்று அறிவுரை வழங்கினர். என்னுடைய அரசியல் வாழ்க்கை என்பது என்னுடைய நாட்டுக்குரியது எனக்கானது அல்ல'' எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், “பாரத் ஜூடோ யாத்திரைக்கான எனது அழைப்பில் இருந்த அவசரத்தையும் அவசியத்தையும் புரிந்துகொண்டு சிரமங்களுக்கு இடையே பெரு முயற்சியெடுத்து என்னுடன் கலந்துகொண்டமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு நம்மை நினைவில் வைத்திருக்கும். உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். வருகிற ஜனவரி 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நான் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் நீங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்