மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய ‘கொரோனோ..உடல் காத்தோம்..உயிர் காத்தோம்..’ என்கிற புத்தக வெளியீட்டு விழா இன்று (13-01-24) நடைபெற்றது. இந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழ்நாடு எப்படி கொரோனாவை வென்றது என்பதை அந்த துறை சார்ந்த அமைச்சரே இந்த புத்தகத்தை எழுதியிருப்பது மிக மிக ஒரு சிறப்பான முன்னெடுப்பு.
இதையெல்லாம் நான் பதிவு செய்தாக வேண்டும். இல்லையென்றால் யாரோ எதையாவது எழுதி அதையே நமது வரலாறு என்று நம்மிடம் அதை எடுத்து சொல்வார்கள். ஒரு 20 30 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் கொரோனா இருந்தது. அப்போது பாஜக இந்தியாவை ஆட்சி செய்தது. மோடி ஆட்சி செய்ததால் தான் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்.
அதனால் இந்த மாதிரி பதிவுகள் எல்லாம் மிக மிக முக்கியம். காலம் காலமாக அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எழுதியது தான் நமது வரலாறு என்று இருந்தது. ஆனால், இப்போது அந்த கதையெல்லாம் நடக்காது. நாங்களும் எழுத ஆரம்பித்து விட்டோம் படிக்க ஆரம்பித்து விட்டோம்” என்று கூறினார்.
இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், ‘ அரசின் மருத்துவத்துறை மட்டுமின்றி, எழுத்துத் துறையிலும் முத்திரைப் பதித்து வரும் மா.சுப்பிரமணியன் எழுதிய “கொரோனா - உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்” என்னும் புத்தகத்தையும், அதன் ஆங்கில பதிப்பான "Corona Chronicles"-ஐயும் சென்னை புத்தகக் காட்சியில் இன்று வெளியிட்டோம்.
2021-ல் கழக அரசு அமைந்த போது, நம் கண் முன் பெரும் சவாலாக கொரோனா 2- ஆம் அலை வேகமெடுத்து இருந்தது. அந்தப் பெருந்தொற்றை அறிவியலின் துணையோடு நம் கழக அரசு முறியடித்த வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார் மா.சுப்பிரமணியன். கொரோனா ஒழிப்புக்கான கையேடு என்று சொல்கிற வகையில் மிகச்சிறப்பான முறையில் இந்த புத்தகங்களை வெளிக்கொண்டு வந்துள்ள அவருக்கு என் வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்