முல்லைப் பெரியாற்றில் அமைந்துள்ள பேபி அணையை வலுப்படுத்துவதற்காக அங்குள்ள 15 மரங்களை வெட்ட தமிழ்நாடு அரசு நீண்டகாலமாக அனுமதி கோரி வந்த நிலையில், சமீபத்தில் கேரள அரசு அந்த 15 மரங்களை வெட்ட அனுமதியளித்ததாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் வாயிலாக நன்றி தெரிவித்திருந்தார். இந்தநிலையில், கேரள அரசு 15 மரங்களை வெட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, ''முதலில் உடனடியாக திமுக அரசு இந்த ஐந்து மாவட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இரண்டாவது, முல்லைப் பெரியாற்றில் 142 அடி உயர்த்துவதற்கு முழுமையாக முயற்சி எடுத்து தமிழக மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மூன்றாவது நேற்று செய்த காமெடி, எனக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது; தமிழக மக்களுக்குக் கோபம் வருகிறது. எங்களுடைய முதலமைச்சர் சினிமாவில் வருகின்ற காமெடி நடிகரைப் போல கேரள முதல்வருக்கு நன்றி சொல்லியிருக்கிறார். எதற்காக என்றால், பேபி அணையின் பக்கத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு. ஆனால் கேரள முதல்வர் அதற்கு பதில் கடிதம் போடுகிறார். அதில், மரத்தை வெட்டுவதற்கு நாங்கள் அனுமதியே கொடுக்கவில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகம் முதலமைச்சரின் தனிப்பட்ட சொத்து கிடையாது. எந்த கடிதம் எழுதினாலும் எட்டரைக்கோடி தமிழக மக்களின் சார்பாகத்தான் அந்தக் கடிதம் எழுதப்படுகிறது. எதையுமே தெரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளாமல் கேரள முதல்வருக்கு 10 மரத்தை வெட்ட நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர்'' என்றார்.