கூட்டணி வேறு கொள்கை வேறு என கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா இன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ அன்றைக்கு கூட்டணி அமைக்கப்பட்டது என்று சொன்னால் அது சூழ்நிலை காரணமாக அமைக்கப்பட்டது. கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுத்தது கிடையாது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி கொள்கையில் நிலையான ஒரே கட்சி அதிமுக தான். கூட்டணி வேறு கொள்கை வேறு. அதிமுக பாஜகவின் பி டீம் இல்லை. அதிமுக தான் ஒரிஜினல் டீம்” என பேசினார்.