"இமாச்சலப்பிரதேச வெற்றியை படிப்பினையாகக் கொண்டு மதச்சார்பற்ற கட்சிகள் பா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் ஓரணியில் திரள வேண்டும்" என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தில் பா.ஜ.கவை வீழ்த்தி இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க உள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரி காங்கிரஸ் சார்பில், காமராஜர் சிலை அருகே முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, " இமாச்சலப்பிரதேசத்தில் பா.ஜ.கவை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.
இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் வெற்றியை ஒரு படிப்பினையாகக் கொண்டு மதச்சார்பற்ற கட்சிகள் பா.ஜ.கவை வீழ்த்த ஓரணியில் திரள வேண்டும். 33 சதவீத வாக்குகள் வாக்குகள் பெற்ற பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. ஆனால் 67 சதவீத வாக்கு பெற்ற எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடக்கிறது. இதை உணர்ந்து அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்தார்.