முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அதே சமயத்தில் ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தர்மயுத்தத்தினை துவங்க எடப்பாடி பழனிசாமி அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வழக்கை விசாரித்த ஆணையம் இறுதியில் தனது ஆய்வறிக்கையை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தது. அறிக்கையில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு இருந்தாலும் முக்கியமாகக் கருதப்பட்டது ஜெயலலிதா உயிரிழந்த தேதி.
இதுவரை ஜெயலலிதா உயிரிழந்த தேதி டிசம்பர் 5 எனச் சொல்லப்பட்ட நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் டிசம்பர் 4 எனக் கூறியது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியே கே.சி.பழனிசாமி போன்றோர் ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்த எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா போன்றோர் வழக்கம்போல் மறுநாளான டிசம்பர் 5-இல் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் அதிமுக பழனிசாமி தரப்பினர் உறுதிமொழியேற்றனர். உறுதிமொழியை பழனிசாமியே முன் மொழிந்தார். அதில், “உதிரத்தில், நாடி நரம்புகளில் கலந்திட்ட நம் அம்மா மறைந்திட்ட இந்நன்னாளில்...” எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து, இ.பி.எஸ் யாரோ எழுதிக் கொடுத்ததை முறையாகச் சோதித்துக் கூடப் பார்க்காமல், ஜெயலலிதா மறைந்த தினத்தை ‘இந்நன்னாள்’ என்று குறிப்பிடுகிறார் எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் நினைவு நாளான இன்று அதிமுக ஈ.பி.எஸ் அணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் இ.பி.எஸ் அணியினர் உறுதிமொழியேற்றனர். கடந்த முறை ஜெயலலிதாவின் நினைவு நாளில் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த முறை உறுதிமொழியேற்பை பலரும் உன்னிப்பாகக் கவனித்து வந்த நிலையில், எம்.ஜி.ஆர் நினைவு நாளில் இன்று ஏற்கப்பட்ட உறுதிமொழியை அதிமுக இ.பி.எஸ். அணியின் செய்தித்தொடர்பாளர் வைகைசெல்வன் முன்மொழிந்தார்.