பன்னீர்செல்வத்தின் கருத்து தான் எங்கள் கருத்தும்; அதைத் தாண்டிச் சொல்ல ஒன்றும் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்தார். 2023 -2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் நிதியமைச்சர் முன்வரிசையில் நின்று படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிதியமைச்சர் தனது உரையைத் துவங்கும் போதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எனினும் நிதியமைச்சர் தொடர்ந்து பட்ஜெட்டை வாசித்தார்.
நிதிநிலை அறிக்கை குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “திமுக பட்ஜெட்டில் தகுதியின் அடிப்படையில் 1000 ரூபாய் தரப்படும் எனச் சொல்லியுள்ளது. அது என்ன தகுதி என்று தெரியவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. மக்களைச் சமாளிக்க வந்த அறிவிப்பு போலத்தான் இருக்கிறது.
பன்னீர்செல்வம் 2017ல் தர்மயுத்தம் துவங்கினார். இப்பொழுது அது தவறு என்பதை உணர்ந்து தான் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிறார். அதுதான் எங்கள் கருத்தும். அதைத் தாண்டிச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதிமுகவின் கோட்டை தான் ஈரோடு. ஆனால், இன்று பழனிசாமி அப்பகுதியை கோட்டை விட்டுள்ளார்கள். எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது” எனக் கூறினார்.