நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாடு மேடைக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய், தொண்டர்களை நோக்கி நடந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த விஜய், 100 அடி கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை வழியில் த.வெ.க. செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய கட்சியின் தலைவர் விஜய் தனதுவழக்கமான பாணியில் தொண்டர்களுக்கு பாம்பையும் அரசியலையும் வைத்துக் குட்டி ஸ்டோரி ஒன்றைக் கூறி உற்சாகப்படுத்தினார். ஆனால் திடீரென பேச்சின் வழக்கை மாற்றிய விஜய், “இந்த உணர்ச்சிகரமான தருனத்துல மேடை பேச்சின் பார்மெட்டையே மறந்துட்டேன். சாரி வெரி சாரி... என்னுடைய கட்சியின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஆனந்த் அவர்களே...., பொருளாளர் திரு.வெங்கட்ராமன் அவர்களே..., இணை கொள்கை பரப்புச் செயலாளர் தாகிரா அவர்களே..., தலைமை நிலைய செயலாளர் திரு.ராஜசேகர் அவர்களே..., ஆமா... எதற்கு இந்த அவர்களே... இவர்களே எல்லாம்? பிறப்புக்கும் எல்லாம் உயிருக்கும்னு ஒரு அடிப்படை கொள்கையை அறிவிச்சிட்டு, அவங்க, இவங்கன்னு எதற்குப் பிரித்து பார்க்கணும்? மேடையில் இருந்தாலும் சரி மேடைக்கு முன்னாடி இருந்தாலும் சரி. இங்க நான், நீ, நாங்க, நீங்க எல்லாம் கிடையாது; நாம் அவ்வளவுதான். இங்க யாரும் மேல, கீழ கிடையாது. பாகுபாடு எல்லாம் பாக்கபோறதும் கிடையாது. நம்மள பொருத்த வரைக்கும் நாம் எல்லாரும் ஒன்னுதான்; எல்லோரும் சமம்தான். அதனால என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவரும் என் உயிர் வணக்கங்கள் என்று பேசி கூடி இருந்த தொண்டர்களை அதிரவைத்தார்.
வழக்கமாக அரசியல் கட்சித் தலைவர்கள் மாநாடு அல்லது பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம் மற்றவர்களைக் குறிப்பிடும் போது அவர்களே, இவர்களே என்று பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் தனது முதல் மாநில மாநாட்டிலே வழக்கமான அரசியல் பேச்சின் பார்மெட்டை மாற்றி அவருக்கென புது ஸ்டைலில் பேசியுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.