தர்மபுரி பகுதியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தக்கோரி பாமக தலைவர் அன்புமணி 3 நாள் பிரச்சார நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என சொன்னது நாங்கள் தான். சொன்னதோடு அல்லாமல் நாங்கள் எடுத்த முயற்சி, கொடுத்த அழுத்தத்தால் அது இன்றைக்கு சட்டமாக வந்துள்ளது. அதே போல் தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றும் வரையில் அழுத்தம் கொடுத்து போராட்டம் நடத்தி அரசு இதை செய்து முடிக்கும் வரையில் நான் ஓயமாட்டேன் .
இது தர்மபுரி மாவட்டத்தின் உயிர்நாடி பிரச்சனை. இதற்கு நிச்சயமாக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். கடந்த ஆட்சிக் காலத்திலும் அறிவுறுத்தினோம். ஆண்டுக்கு 20 நாள் மட்டுமே உபரி நீர் இப்பகுதியில் செல்கிறது. அப்பொழுது தான் தண்ணீர் எடுக்க வேண்டும் . இந்த திட்டத்தினால் கடைமடை பகுதியில் உள்ள மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. 200 டிஎம்சி உபரி நீர் கடலில் கலக்கிறது நாங்கள் கேட்பது 3 டிஎம்சி தான்.ஆகையில் இப்பிரச்சனை தீர்கின்ற வரை எங்கள் போராட்டம் ஓயாது" என தெரிவித்துள்ளார்.